
ஸ்ரீ கெம்பாங்கான்,செப். 11-
நல்ல சிந்தனையும் நல்ல செயலும் கொண்டவர்கள் ஒன்று திரண்டால் அரசியல் நறுமணம் பெறும் என்கிறார் மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். எஸ். தனேந்திரன்.
அரசியல் ஒரு சாக்கடை என்று கூறிக் கொண்டிருப்பததை விடுத்து மனதில் என்ன நல்ல எண்ணங்களை விதைத்து தாங்கள் சார்ந்த கட்சியின் இலக்கை அடைய பாடுபட்டால் நாட்டில் இந்திய சமூகம் வளம் பெறும் என்றார் அவர் .
“ நம்மிடையே போட்டி, பொறாமை இருக்கக் கூடாது . நமக்குள் இருக்கும் குறைகளை மட்டுமே பேசி பேசி நம்மை நாமே சதா தாழ்த்திக் கொண்டிருக்கிறோம் .
இதை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து சமூக மேம்பாட்டிற்கு பாடுபட வேண்டும் “ என்று இங்கு மக்கள் சக்தி கட்சியின் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில தொடர்பு குழு கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார் .
சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான திட்டங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும் . இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரண தலைமைத்துவத்தை நாம் உருவாக்க வேண்டும் “ என்றார்
மக்கள் சக்தியில் புதிய உறுப்பினர்கள் இணைந்திருப்பது இக்கட்சி மீது இவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையே காட்டுகிறது . இந்த நம்பிக்கைக்கு ஏற்ப நாட்டில் உள்ள இந்தியர்களின் நலனுக்காக கட்சி தொடர்ந்து பாடுபடும் என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது தமிழ்ப்பள்ளி, பெண்கள் மேம்பாடு போன்ற விவகாரங்கள் மீது கட்சி கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட தனேந்திரன், விரைவில் பல திட்டங்களோடு நல்ல உருமாற்றம் பெறும் என்றார்.
இதனிடையே, 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் மக்கள் சக்தி கட்சியின் மாநாடு கோலாலம்பூர் ஸ்ரீ பசிபிக் ஹோட்டலில் நடைபெறும் . இந்த மாநாட்டை துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
மஇகா தேசிய தலைவர் டான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் சிறப்பு வருகை புரிவார் என்றும் அறியப்படுகிறது.
28ஆம் தேதி மகளிர், இளைஞர், புத்ரா மற்றும் புத்ரி மாநாடுகள் நடைபெறும்.