
ஜெனிவா செப்.20– “சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் இருப்பதை” 12 மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேலைக் கோரும் பாலஸ்தீனத்தின் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவை நேற்று ஏற்றுக்கொண்டது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 124 வாக்குகள் கிடைத்த வேளையில் 43 நாடுகள் வாக்களிக்கவில்லை.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் 12 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
இஸ்ரேலை தனிமைப்படுத்தும் இந்த நடவடிக்கை உலகத் தலைவர்கள் தங்களின் வருடாந்திர ஐ.நா கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.
193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுப் பேரவையில் பாலஸ்தீன அதிபர் மாமுட் அப்பாஸ் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி உரையாற்றவுள்ள நிலையில் அதே நாளில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் உரையாற்ற உள்ளார்.
பாலஸ்தீனப் பகுதிகள் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் குடியேற்றங்களில் சட்டவிரோதமானது என்றும் அதை திரும்பப் பெற வேண்டும் என்றும் அனைத்துலக நீதிமன்றம் (ஐ.ஜே.சி.) கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட ஆலோசனைக் கருத்தை இந்தத் தீர்மானம் வரவேற்கிறது.