ஈப்போ, செப்.25- புந்தோங் தொகுதியில் சுங்கை பாரி ஆண்கள் இடைநிலைப்பள்ளியில் 95 சதவீதம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் சுற்று வட்டாரத்திலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்கள். அண்மைய காலமாக இப்பள்ளி மாணவர்கள் தமிழ்மொழி வகுப்பிற்கும் செல்வதில்லை.
அத்துடன், எஸ். பி.எம் தேர்வில் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கிய தேர்வு எழுதுவதில்லை என்ற புகாரை இப்பள்ளியின் மலாய்கார தலைமையாசிரிர் கிடைக்கப் பெற்றுள்ளார்.
இந்த இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம். தேர்வில் தமிழ்மொழி பாடத்தை தேர்வில் எழுதுவதோடு, தமிழ் இலக்கியத்தை தேர்வுக்கு எடுக்க வேண்டும் என்று கட்டளையை பிறப்பித்துள்ளார் என்று இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், நேசகரங்கள் இயக்க தலைவருமான இரா.ஜெயசீலன் கூறினார்.
இந்த மலாய் தலைமையாசிரியரின் அக்கறை மற்றும் ஆர்வத்தை கண்டு, அப்பள்ளிக்கு உதவும் பொருட்டு 6 ஆயிரம் ரிங்கிட் செலவில் பிரத்தியேக தமிழ்மொழி அறை ஒன்று இப்பள்ளியில் நிறுவப்பட்டுள்ளது.
இதற்கு இப்பள்ளியின் தலைமையாசிரியர் முழுமையான ஆதரவு வழங்கியதற்கு அவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த பிரத்தியேக தமிழ்மொழி அறையில் இந்திய மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்க அனைத்து ஏற்பாடுகள் செய்து தொலைக்காட்சி, புதிய நாற்காலிகள், மேசைகள், அலமாரிகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் பொருத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த உதவிகள் அனைத்தும் நேசகரங்கள் இயக்கத்தினரும், துர்காஷினி எண்டர்பிரைஸ் நிறுவனரின் ஆதரவால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
ஒரு மலாய்கார தலைமையாசிரியர் தம் பிள்ளைகள் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கிய தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் என்று நம்பிக்கையுடன் செயல்படுகிறார்.
மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் பள்ளியின் மதிப்பீடு சரிவு கண்டால் பிரச்சினை இல்லை. ஆனால், தனிப்பட்ட மாணவனின் வெற்றியே அவசியம் என்று அந்த தலைமையாசிரியரே இந்த தமிழ்மொழி சிறப்பு அறையை வரும் 30.9.2025( திங்கட்கிழமை) காலை மணி 8.00 க்கு திறப்புவிழா செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக ஜெயசீலன் மகிழ்ச்சியுடன் கூறினார்