கோலாலம்பூர் செப் 25-
இணையப் பகடிவதைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட ஈஷா எனப்படும் ராஜேஸ்வரிக்கு எதிராக ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி அவமானப்படுத்திய குற்றத்திற்காக டுலால் பிரதர்ஸ் எனும் சதீஸ்குமாருக்கு 12 மாதம் சிறைத் தண்டனை விதித்து கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
4 மாதங்களுக்கு முன் இணையப் பகடிவதைக்கு இலக்கான டிக்டாக்கில் செல்வாக்கு கொண்ட ராஜேஸ்வரி என்ற ஈஷா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈஷாவுக்கு எதிராக ஆபாசமான தகவல்களை வெளியிட்டு அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் 40 வயதுடைய சதீஸ்குமார் கடந்த ஜூலை 10ஆம் தேதி கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி சித்தி அமினா கஷாலி முன்னிலையில் நடைபெற்றது.
இந்த வழக்கில் சதீஸ் குமாருக்கு 12 மாதச்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கைதான நாளில் இருந்து இத்தண்டனை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி சித்தி அமினா தனது தீர்ப்பில் அறிவித்தார்.
முன்னதாக, மூன்று குழந்தைகளின் தந்தையுமான அவர் மன்னிப்பு கேட்டு, தனது தவறை ஒப்புக்கொண்டார்.
மேலும் இந்த செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.