பத்து காஜா,செப் 25: பத்து காஜா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட லஹாட்,மகிழம்பூ வட்டாரத்தில் நடைபெற்ற தங்லோங் கொண்டாட்டத்தில் சுமார் 1500 பேர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி குறித்து பேசிய பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் வட்டார மக்களிடையே ஒற்றுமையையும் பண்பாட்டையும் மேலோங்க செய்திட இம்மாதிரியான சமயம்,பண்பாடு சார்ந்த கொண்டாட்டங்கள் வழிவகுப்பதாகவும் கூறினார்.
கடந்தக் காலங்கள் போல் இல்லலாமல் இன்றையச் சூழலில் ஒவ்வொரு இனங்களின் பெருநாளும் கொண்டாட்டங்களும் மலேசியர்களின் உன்னத திருநாளாகவே உயிர்பெற்றும் வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி,இளைஞர்களும் சிறுவர்களும் கூட ஆர்வத்தோடு தங்லோங் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மலேசியாவிற்கே உரிய பல்லின மக்களின் பண்பாடும் கலாச்சாரமும் மெய்ப்படுவது பெரும் நம்பிக்கையாக திகழ்வதாகவும் தெரிவித்தார்.
இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் மெங்கிலம்பூ சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிபன் சாவ் உட்பட லஹாட் மற்றும் மெங்கிலம்பூ கிராமத்து தலைவர்களும் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட பொது மக்களுக்கு உணவு கூடைகளோடு மூன்கேக் மற்றும் அதிஷ்ட பரிசுகளும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் காலம் கடந்தும் தலைமுறை தாண்டியும் மலேசியாவின் நனிச் சிறந்த அடையாளமாக தொடர்ந்து உயிர் பெறும் என்றும் சிவகுமார் தெரிவித்தார்.