ஷா ஆலம், செப். 25 – அடுத்த ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில் இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு மாநில அரசு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் (சொக்சோ) சிலாங்கூர் கிளை பரிந்துரைத்துள்ளது.
ஆண்டுக்கு 120 வெள்ளி பங்களிப்பை வழங்குவதன் மூலம் பெண்கள் தங்கள் குடும்பங்களை நிர்வகிக்கும் போது ஏற்படும் விபத்து அல்லது பேரிடர்களுக்கு விரிவான பாதுகாப்பைப் பெற முடியும் என்று சிலாங்கூர் மாநில சொக்சோ இயக்குனர் இஸ்மாயில் அபி ஹாஷிம் கூறினார்.
இதுவரை சிலாங்கூரில் 30,800 பெண்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். எனவே பெண்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு உதவி சென்றடைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தில் 80,000 பங்களிப்பாளர்களைச் சேர்க்க சிலாங்கூர் சொக்சோ இலக்கு கொண்டுள்ளது. ஆனால் பங்களிப்பின் அவசியத்தை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதால் இதற்கு நீண்ட காலம் எடுக்கும் என அவர் சொன்னார்.