நியூயார்க், செப். 26 –
ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பாதுகாப்பு மன்ற ரத்து அதிகாரத்தை (வீட்டோ) பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும்படி மலேசிய வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளது.
கட்டுப்பாடற்ற முறையில் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்துவது அமைதி முயற்சிகளில் குறிப்பாகப் பாலஸ்தீன விவகாரத்தில் முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாக அது கூறியது.
ஐ.நா. பாதுகாப்பு மன்றம் விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், அனைத்துலகச் சட்டங்களை நிலை நிறுத்துவதையும் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட தீர்மானங்களை தடுத்து நிறுத்துவதற்கு ரத்து அதிகாரம் பயன்படுத்தப்பட கூடாது என்று சொன்னார்.
“எல்லா இடங்களிலும் ஒரே கேள்விதான் எதிரொலிக்கிறது. சரி செய்யும் அளவுக்கு ஐ.நா. மோசமாக சீர்குலைந்துள்ளதா? என்பதுதான் அந்த கேள்வி.
ஐ.நா.வை சரி செய்வதற்கு வழி அதுவும் ஒரே வழி மட்டுமே உள்ளதால் அந்த கேள்விக்கு இல்லை என்பதுதான் பதிலாக அமையும்.
ரத்து அதிகாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அந்த ஒரு வழி“ என்று அவர் “அமைதிக்கான தலைமைத்துவம், ஐ.நா. சாசனத்தை மதிப்பதில் ஒன்றுபடுவோம். பாதுகாப்பான எதிர்காலத்தைத் தேடுவோம்“ எனும் தலைப்பிலான விவாதத்தின் போது அவர் குறிப்பிட்டார்.
கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி ஒருமித்த ஆதரவுடன் ஐ.நா. பொதுப் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இ.எஸ்.10/24 தீர்மானத்தை அமல் செய்வதில் முழு ஒத்துழைப்பு வழங்கும்படி ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தை அவர் கேட்டுக் கொண்டார்.
Bernama