தைப்பிங் நகரில் பேரா மாநில அளவிலான விநாயகர் அகவல் பாராயணப் பெருவிழா!

லாரூட் மாத்தாங், செப் 26-

மலேசிய இந்துதர்ம மாமன்றம் லாருட் மாத்தாங் அருள்நிலையம் ஏற்பாட்டில் பேரா மாநில அளவிலான விநாயகர் அகவல் பாராயணப் பெருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படது.

தைப்பிங் ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பேரா மாநிலத்திலுள்ள ஐந்து அருள்நிலையங்களிலிருந்து 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பத்துகாஜா, சுங்கைசிப்புட், பந்தாய் ரெமிஸ், சித்தியவான் ஆகிய ஊர்களில் இயங்கும் இந்துதர்ம வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

விநாயகர் அகவல் பாராயணத்தில் 17 குழுக்கள் கலந்து கொண்டு ஒப்புவித்தனர்.

இப்பெருவிழாவில் பல ஆண்டுகளாக சமயத்தொண்டு ஆற்றிவரும் மூத்த சேவையாளர்கள் 9 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

இப்பாராயணப் பெருவிழாவை தைப்பிங் நாடாளுமன்ற இந்திய நலப் பிரதிநிதியும் நகராண்மைக்கழக உறுப்பினருமான சுப்பிரமணியம் இராமநாதன் சிறப்பு வருகை புரிந்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தம்முடைய முழு ஆதரவையும் நிதியுதவியையும் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

லாருட் மாத்தாங் அருள்நிலையம் தொடர்ந்து சமய சேவை ஆற்றிவர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இவ்விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த லாருட் மாத்தாங் அருள்நிலையத் தலைவர் பரமேஸ்வரன் முனியாண்டி மற்றும் செயலவையினரை வெகுவாகப் பாராட்டினார்.

இப்பாராயணப் பெருவிழாவின் நினைவாக விநாயகர் அகவல் பாடல் பதாகை ஆலய மண்டபத்தில் நிறுவப்பட்டதையும் வெகுவாகப் பாராட்டினார்.

மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை தமது சிறப்புரையில் இதுபோன்ற மந்திர ஆற்றல் கொண்ட பாடல்களைப் பாராயணம் செய்வதன் வழி மாணவர்களது மன ஆற்றலையும் சிந்தனையாற்றலையும் வளர்க்கும். அத்தோடு அவர்களுக்கு பாதுகாப்பு கவசமாகவும் இருந்து துணைவரும் என்று குறிப்பிட்டார்.

மேலும் இந்த மண்டபத்தை வழங்கி பிற உதவிகளையும் செய்து கொடுத்த ஆலய நிர்வாகத்திற்கும் செயலாளர் மணிவண்ணன் அவர்களுக்கும் மாமன்றத்தின் நன்றியை தெரிவித்துக் கொண்டார்

பெருவாஸ் இந்துதர்ம வகுப்பு மாணவர்கள் ஔவை பிராட்டியாரின் அருட்கொடைகள் எனும் தலைப்பில் அரங்கேற்றிய இலக்கிய குறுநாடகம் அனைவரையும் கவர்ந்தது.

மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என சுமார் 250 பேர் கலந்து கொண்ட இப்பெருவிழாவில் மாமன்றத்தின் பொதுச்செயலாளர் சுப்பிரமணி சோணையா துணைத்தலைவர் ரிஷிகுமார் வடிவேலு, பேரா மாநிலத்தலைவர் கிருஷ்ணன் சுப்பிரமணியம் இந்துசேவை சங்கத் தலைவர் சிவ.சித.முத்துராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles