கோலாலம்பூர், செப். 26
குளோபல் இக்வான் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தொடர்பில்
கைதான 34 பேரின் தடுப்புக் காவல் அனுமதி முடிவுக்கு வந்தவுடன்
அவர்கள் அனைவரும் சொஸ்மா எனப்படும் 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு
குற்றச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது
செய்யப்படுவர்.
அந்த 34 பேருக்கும் எதிரான தடுப்புக் காவல் அனுமதி நேற்றுடன்
முடிவுக்கு வந்ததாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின்
ஹூசேன் கூறினார்.
மேலும், 127 பேர் ஜாமீன் முடிந்து விடுவிக்கப்பட்ட வேளையில் சமூக நல
உதவி தேவைப்படும் பட்சத்தில் காவல் துறையை அணுகும்படி அவர்கள்
கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
மேலும், உயர் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 24 ஜி.ஐ.எஸ்.பி. ஹோல்டிங்ஸ்
உறுப்பினர்களுக்கு எதிரான தடுப்புக் காவலை இன்று தொடங்கி நான்கு
நாட்களுக்கு நீட்டிப்பதற்கான அனுமதியை காவல் துறை
பெற்றுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் 2007ஆம் ஆண்டு மனித
வர்த்தகம் மற்றும் புலம் பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்புச் சட்டத்தின் 12வது
பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
உள்நாட்டு வருமான வரி வாரியத்துடன் இணைந்து நடத்தப்பட்ட
சோதனையில் ஜி.ஐ.எஸ்.பி. ஹோல்டிங்ஸ் நிறுவனம் உரிய வருமான
வரியைச் செலுத்தாதது கண்டறியப்பட்டதாக கூறிய அவர், இதன்
தொடர்பில் 1967ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டதின் கீழ் விசாரணை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இது தவிர, ஜி.ஐ.எஸ்.பி. ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள
பாதிக்கப்பட்ட சிறார்களுக்க நிதி திரட்டும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட
பேஸ்புக் பக்கம் ஒன்றையும் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக அவர்
குறிப்பிட்டார்.
பெர்னாமா