
ஷா ஆலம், செப்.27– சிலாங்கூர் மாநில அரசின் இவ்வாண்டிற்கான தீபாவளிக் கொண்டாட்டம் வரும் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி கிள்ளான், லிட்டில் இந்தியா, செட்டி பாடாங்கில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் நடைபெறவுள்ளது.
மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த கொண்டாட்டம் இரவு 7.00 மணி தொடங்கி நள்ளிரவு 12.00 மணி வரை பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளுடன் வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த 2024 தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று மாநில அரசு தலைமையகத்தின் நடவடிக்கை அறையில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு தலைமையில் நடைபெற்றது.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில மிகவும் சிறப்பான முறையில் இந்த விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகப் பாப்பாராய்டு தெரிவித்தார்.
இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிலாங்கூரிலுள்ள ஆலயங்களுக்கு மாநில அரசின் சார்பாக மானியம் வழங்கும் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம் என்று அவர் சொன்னார்.