புத்ராஜெயா, செப். 27 – லெபனானில் மரண எண்ணிக்கை மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு சேதங்கள் பரவலாக அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டில் உடனடி போர் நிறுத்தத்திற்கு மலேசியா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த தொடர்ச்சியான மோதல்கள் பிராந்தியத்திற்கு விரிவாக்கம் காண வழிவகுக்கும் எனவும் அது எச்சரித்தது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்கள் குறித்து மிகுந்த கவலையை வெளிப்படுத்திய வெளியுறவு அமைச்சு, (விஸ்மா புத்ரா) 600 க்கும் மேற்பட்ட மக்களின் உயிரைக் பலி கொண்டு உள்கட்டமைப்பிற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்திய லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை கடுமையாக கண்டனம் செய்தது.
மோதலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர மலேசியா விரும்புகிறது.
இல்லையெனில் அது பரந்த பிராந்திய விரிவாக்கத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அரச தந்திர முயற்சிகளுக்கு ஆதரவாக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு, இங்கிலாந்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் செப்டம்பர் 25ஆம் தேதியிட்ட கூட்டறிக்கையை மலேசியா வரவேற்பதாக விஸ்மா புத்ரா கூறியது.