
கோலாலம்பூர், செப். 27- தனது சொத்து விபரங்களை அறிவிக்க எப்போதும் தாம் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப் படக் கூறினார்.
சொத்துகளை அறிவிக்க யாராவது நாளை எனக்கு கோரிக்கை விடுத்தால் நான் அவ்வாறு செய்யத் தயாராக இருக்கிறேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழத்திற்கு தோண்டுங்கள். அப்போதுதான் தலைவர்களாகவும் சிறந்த முன்னுதாரணமாகவும் ஆக முடியும். இல்லாவிடில் நாம் மக்களுக்கு எதனைப் போதிப்பது? சிறப்பான நிர்வாகத்தின் வாயிலாக மட்டுமே இஸ்லாத்தின் மாண்பை உயர்த்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.
சொத்துகளை அறிவிக்கச் சொன்னால் சிலர் கோபப்படுகிறார்கள். நாம் பழிவாங்குகிறோம் என்கிறார்கள். நீங்கள் தவறு செய்யா விடில் சொத்துகளை அறிவிப்பதில் உங்களுக்கு ஏன் அச்சம்? என அவர் கேள்வி எழுப்பினார்.
நேற்று இங்குள்ள தாமான் ஆலம் சூத்ராவில் தாபிஷ் ஒருங்கிணைந்த அறிவியல் இடைநிலைப் பள்ளி வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.