


செ.வே.முத்தமிழ் மன்னன்
குளுவாங் செப் 27-
நாளை நடைபெறும் குளுவாங் மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றியை மைபிபிபி கட்சி உறுதி செய்யும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
நேற்று குளுவாங்கில் மைபிபிபி கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள டத்தோ டாக்டர் லோகபாலா இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
மக்கோத்தா சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் சைட் ஹுசைன் பின் சைட் அப்துல்லா இதில் கலந்து கொண்டார்.
இந்த இடைத்தேர்தலில் myPPP வாக்காளர்கள் முழு ஆதரவை அளித்து BN வேட்பாளர் Sdr சைட் ஹுசைனின் வெற்றியை உறுதி செய்வார்கள் என்று பலத்த கரவொலிக்கிடையே டத்தோ டாக்டர் லோகபாலா அறிவித்தார்.
தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது.
மக்கள் நலன், அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டில் ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க தேசிய முன்னணிக்கு வாக்களிக்கும் படி அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.
நாளை நடைபெறும் இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் வாகை சூடும் என்றார் அவர்.
மைபிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் சத்தியா சுதாகரன், கட்சியின் செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன், ஜொகூர் மாநில மைபிபிபி பொறுப்பாளர்கள் பெரும் அளவில் இது நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.