கோலாலம்பூர், செ.27:
ஜோகூர் சட்டமன்றத் தொகுதி மக்கோத்தா(என்.29)வில் மஇகா மேற்-கொண்டுவரும் அதிரடி தேர்தல் பிரச்சாரம் இன்று வெள்ளி மாலையுடன் நிறைவுபெறுகிறது.
கடந்த 14-ஆம் நாள் இந்த சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இடம்பெறுவதற்கு முன்பே இந்திய வாக்காளர்களை இலக்குவைத்து, வாக்குவேட்டையில் களம் இறங்கிய மஇகா, தேசிய-மாநில-தொகுதி அளவிலான தலைவர்கள்-பொறுப்பாளர்களுடன் இளைஞர்-மகளிர்-புத்ரா-புத்ரி பொறுப்பாளர்களுடன் முழுவீச்சில் களம் இறங்கி அங்குள்ளா வாக்காளர்களை, குறிப்பாக 5,144 இந்திய வாக்காளர்களை மையம்கொண்டு, முழு தேர்தல் இயந்திரத்தையும் முடுக்கி விட்டிருந்தது.
இதன் உச்சக்கட்டமாக, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேசுவரன் கடந்த புதன்கிழமை செப்டம்பர் 25-ஆம் நாள் மக்கோத்தா தொகுதி முழுவதும் வலம் வந்தார். தாமான் இல்ஹாம், தாமான் ஸ்ரீ குளுவாங், இலங்கையர் மண்டபம்(டேவான் சிலோனீஸ்), பாடாங் தேம்பா ஆகிய இடங்களுக்கு டான்ஸ்ரீ வருகை மேற்கொண்டபோதும் உரை நிகழ்த்தியபோதும் எழுந்த இந்திய சமூகத்தின் ஆதரவு அலை விண்ணைத் தொட்டது என்று மஇகா குளுவாங் தொகுதி அலுவலகத்தில் இருந்து பேசிய எல்.சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.
மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் தேசியத் தலைவரின் சிறப்புச் செயலருமான சிவசுப்பிரமணியன், கடந்த சில தினங்களாக குளுவாங்கி-லேயே தங்கி தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து வரும் நிலையில், இன்று மாலையில் தேர்தல் பரப்புரைப் பணிகள் நிறைவடை இருப்பதால், இன்றைய காலைப்பொழுது வட்டார மஇகா-வினர் புடைசூழ பரபரப்பாகத் தொடங்கி-யுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்த் தரப்பினர், தாங்கள் தோல்வியடைவது உறுதி எனத் தெரிந்ததும் தேசிய முன்னணி வெற்றி வேட்பாளரும் ஒற்றுமை அரசாங்கத்தின் ஆதரவுபெற்றவருமான சைட் உசேன் சைட் அப்துல்லா, குற்றப் பின்னணி கொண்டவர் என பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர். அது, பொய்த் தகவல் என்பதை காவல் துறை வெளியிட்ட அறிக்கையும் தெளிவாகத் தெரிவிக்கிறது.
எனவே, அம்னோ வேட்பாளர், அம்னோ கோட்டையில் போட்டி இடுகிறார் என்று மேம்போக்காக இருந்துவிடாமல், ஒவ்வொரு இந்திய வேட்பாளரும் தத்தம் வாக்குச்சாவடியில் தங்களுக்கான வாக்கை, முன்கூட்டியே செலுத்தும்படி மஇகா தேசியத் தலைவர் கேட்டுக் கொண்டதை மீண்டும் நினைவுபடுத்துவதாக சிவசுப்பிரமணியம் மேலும் தெரிவித்தூள்ளார்.