சுங்கை சிப்புட், அக்.2:
பேராக் மாநிலத்தில் சுங்கை சிப்புட் ஈவூட் புதிய தமிழ்ப்பள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார்.
இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வு வரும் 6.10.2024( ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.30 க்கு நடைபெறவுள்ளதாக இந்நிகழ்வின் தகவல் பிரிவு தலைவரும், கோலகங்சார் ஊராட்சி மன்ற உறுப்பினருமான கோபி இராமசாமி தெரிவித்தார்.
இந்நாட்டு பிரதமர் முதல் முறையாக ஒரு தமிழ்ப்பள்ளியை தொடக்கி வைக்கும் அரிய நிகழ்வாகும்.
இப்பள்ளி 13 மில்லியன் ரிங்கிட் செலவில் அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட தாகும் அத்துடன், இப்பள்ளி விசாலமான நிலப்பரப்பை கொண்டுள்ளது.
காலப்போக்கில் அதிகமான வசதிகளை இங்கு உருவாக்க போதிய இடம் உள்ளதாக அவர் மகிழ்சியுடன் கூறினார்.
நம் நாட்டின் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், 6 புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்போவதாக கடந்த ஜனவரி 10இல் 2012 தலைநகர் கின்றாரா தமிழ்ப்பள்ளியில் அறிவிப்பு செய்தார்.
அந்த அறிவிப்பால் உருவான ஒரு தமிழ்ப்பள்ளிதான் இந்த சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளி என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இப்பள்ளி அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய நவீன தமிழ்ப்பள்ளியாகும்.
குறிப்பாக, விசாலமான நிலப்பரப்பை கொண்டுள்ளதால் இங்கு சிறந்த விளையாட்டு திடல், அருந்தகம், அறிவியல் கூடம், இசை பயிற்சி அறை, கலைக்கல்வி அறை, வடிவமைப்பு தொழில்நுட்ப பட்டறை அறை, உடற்கல்வி கூடம், குறைநீக்கல் கற்றல் கற்பித்தல் அறை, ஓய்வு பகுதியுடன் சிகிச்சை அறை, பாடநூல் அறை மற்றும் சிற்றுண்டியும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இப்பள்ளியின் திறப்பு விழா சிறப்பாக அமைந்திட இவ்வட்டார பொதுமக்கள் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்கி இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள அன்போடு அழைப்பதாக பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியத்தினர் கேட்டுக் கொண்டனர்.
கூடுதல் தகவல்களுக்கு திரு. தியாகராஜன் சொக்கலிங்கம் – 013-5306158,
திரு. சபா கணேசு – 012-5615115,
திரு. ரவிபாலன் –
012-5835709 மற்றும்
குமாரி தனலெட்சுமி குப்புசாமி 016-5214807 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.