புத்ராஜெயா, அக் 2-
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச முதியோர் தினத்தை இன்னும் அர்த்தம் பொதிந்ததாக உண்டாக்கும் வகையில் மலேசிய சோசலிசக் கட்சி மற்றும் 45 சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு மகஜர் வழியாக அரசிடம் சமர்ப்பித்தது.
நமது நாட்டில் உள்ள முதியோர்களின் அவலநிலை குறித்து அக்கறை கொள்ளும் நோக்கில் மேற்கொண்ட மகஜர், புத்ரஜெயா, பிரதமர் துறை அலுவலகத்தில் பிரதமத் துறை சிறப்பு அதிகாரியிடம் வழங்கப்பட்டது.
முன்னதாக 45 சமூக அமைப்புகளுடனான ஒப்புதலோடு பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டம், கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
65 வயது மற்றும் அதற்கு மேல் கொண்ட மூத்தவர்கள், அரசு ஓய்வூதியம் பெறாத அல்லது 1 மில்லியனுக்கும் குறைவாக EPF சேமிப்பை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் RM500 மாதாந்திர ஓய்வூதியமாக அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதே இந்த குறிப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் மகஜர் கையளிக்கும் நிகழ்வின் போது சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளோடு, PSM கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், PSM தேசிய பொதுச் செயலாளர் சிவரஞ்சனி மாணிக்கம், PSM தேசிய பொருளாளராக சோ சொக் க்வா, மத்திய செயலவை உறுப்பினர்கள் மற்றும் நாடு தழுவிய நிலையில் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.