ஈப்போ, அக்.1: இனிவரும் காலங்களில் பேராக் மாநிலத்தில் பள்ளிச் சிற்றுண்டிகள் மட்டும் உணவகங்கள் அசுத்தமாக இருந்தால் அந்த வளாகம் இரு வாரங்களுக்கு மூடி வைக்கப்படும். அத்தடன், சம்பந்தப்பட்ட உணவக மற்றும் சிற்றுண்டி குத்தகையாளர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இங்குள்ள செப்போர் தேசிய பள்ளியின் சிற்றுண்டிசாலையை நேரடியாக பார்வையிட்ட போது பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம்,ஒற்றுமை மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
கடந்த மாதம் 25 ல், காலையுணவு இப்பள்ளியில் சாப்பிட்ட 134 மாணவர்கள் நச்சுணவால் பாதித்துள்ளனர் என சந்தேக நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 61 பெண் மாணவர்களும் 71 ஆண் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தவிர்த்து ஒரு ஆசிரியரும், ஒரு பணியாளரும் பாதித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சிற்றுண்டியில் தயார் செய்யப்பட்ட உணவுகளை பரிசோதனை மேற்கொள்ள பேராக் மாநில சுகாதார இலாகா நடவடிக்கைகள் மேற்கொண்டன. அதில், சாக்லெட் கலந்த சுவை பானமும், கோழி பொறியலும் நச்சுணவாக அடையாளம் காணப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.
உணவு தயாரிப்பு என்பது உயிர் சம்பந்தப்பட்ட தொழில் என்பதனை முதலில் உணருதல் அவசியமாகும். ஆகையால், இத்துறையில் சம்பந்தப்பட்டவர்கள் அதிக அக்கறையுடன் பொறுப்புணர்வுடன் பாதுகாப்பு அம்சங்களுடன் உணவை சமைக்க முற்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
தற்காலிகமாக இப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு ஏற்பாட்டை மாவட்ட மற்றும் மாநில கல்வி இலாகா பொறுப்பேற்று வழிநடத்துவர். அவர்கள் மிக விரைவில் புதிய சிற்றுண்டி குத்தகையாளரை நியமனம் செய்வார்கள் என்று அவர் உறுதியளித்தார்.
தற்போதைய நிலவரப்படி மருத்துவமனை மற்றும் கிளினிக்கில் வெளிநோயளியாக சிகிச்சை பெற்ற அனைத்து மாணவர்களும் சீராக ஆரோக்கியமாக உள்ளனர். அவர்கள் அனைவரும் பள்ளிக்கு வழக்கம் போல வருவதாக அவர் கூறினார்.
இச்சந்திப்பில், பள்ளி தலைமையாசிரியர், கிந்தா மற்றும் பேராக் மாநில சுகாதார அதிகாரிகள் மற்றும் பேராக் மாநில , மாவட்ட கல்வி அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.