ஷா ஆலம், அக். 3-
வேலை தேடும் கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த
பொது மக்களுக்கு உதவும் நோக்கில் மாநில அரசு ஜெலாஜா ஜோப்கேர்
சிலாங்கூர் வேலை வாய்ப்புச் சந்தையை எதிர்வரும் சனிக்கிழமை கிள்ளான்,
ஹம்சா மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் நிகழ்வில் 3,000 க்கும் மேற்பட்ட
வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுவதாக மனித வளம் மற்றும்
வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு
கூறினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வோர் நேர்முகப் பேட்டிகளில் கலந்து
கொள்ளும் அதே வேளையில் வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசகச்
சேவையையும் பெறுவதற்குரிய வாய்ப்பினைப் பெறுவர் என்று அவர்
சொன்னார்.
காலை 9.00 மணி தொடங்கி மாலை 4.00 மணி வரை நடைபெறும் இந்த
நிகழ்வில் அரசாங்க மற்றும் தனியார் துறையினரின் ஏற்பாட்டிலான
வேலை வாய்ப்பு கண்காட்சியும் இடம் பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆர்வமுள்ளோர் https://tinyurl.com/JCKLANG என்ற அகப்பக்கத்தில் உள்ள
விண்ணப்பாரத்தை பூர்த்தி செய்து தங்கள் வருகையை முன்கூட்டியே
பதிவு செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் கினி