ஷா ஆலம்,அக் 11-
துவான் மீ தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி பேருந்து கட்டண உதவிக்கான சிலாங்கூர் மாநில அரசின் உதவி மானியம் ஜெராம் தொகுதியின் இந்திய சமூகத் தலைவரால் அப்பள்ளியில் வழங்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த மானிய உதவி திட்டத்தில், ஒவ்வொரு மாணவருக்கும் தலா 300 வெள்ளி வழங்கப்படுகிறது.
இவ்வாண்டு இப்பள்ளியில் உள்ள சுமார் 43 வசதி குறைந்த மாணவர்கள் இந்த உதவியை பெற்றனர்.
இந்நிகழ்வில் ஜெராம் தொகுதியின் இந்திய சமூகத் தலைவர் திரு மணிவர்ணன்,துவான் மீ தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், அப்பகுதியை சேர்ந்த அரசு சாரா நிறுவன பிரதிநிதி மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வசதி குறைந்த மாணவர்கள் கல்வியை தொடர்வதில் பொருளாதாரச் சிக்கல் தடையாக இருக்க கூடாது என்பதற்காக மாநில அரசு இந்த பேருந்து கட்டணத் திட்டத்தை அமுல்படுத்தி வருவதாக திரு மணிவர்ணன் தெரிவித்தார். ஏழைகளின் நலனில் அக்கறை காட்டும் மாநில அரசின் பரிவுக்கு, தனது மனமார்ந்த நன்றியையும், அவர் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாண்டு இந்த உதவி திட்டத்தின் வழி மாநிலத்தில் உள்ள 99 தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் 3,426 வசதி குறைந்த மாணவர்களுக்கு 10 லட்சத்து 27 ஆயிரத்து 800 வெள்ளி பகிர்ந்தளிக்க படுவதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு துறையின் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு கடந்த 7ம் தேதி ஷா ஆலம் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் மாநாட்டு மையத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.