பத்துமலை அக் 12, பத்துமலை இந்தியர் கிராமம் அல்லது இந்தியர் செட்டில்மெண்ட் நில விவகாரம் குறித்து உலாவரும் காணொளியில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று தீபாவளி பண்டிகையை ஒட்டிய காலத்தில் வீட்டை அப்புறப்படுத்த வழங்கிய குறுகிய காலக்கெடு கொண்ட நோட்டிஸ்.
கோம்பாக் நில அலுவலகம், பெருநாட்கள் காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதிலுள்ள அசௌகரியம் மற்றும் சிரமம் அறிந்து வெளியேற்ற காலத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீடித்துள்ளது.
இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
மீடியா சிலாங்கூர் அங்கு இறங்கி மக்களின் கருத்துக்களை பெற முற்பட்ட வேளையில் , அங்கு வந்திருந்த கோம்பாக் நில அலுவலக அதிகாரிகள் , புதிய அல்லது மாற்று அறிவிப்பு கடிதங்களை வழங்கிக் குடியிருப்பாளர்களுக்கு விளக்கம் அளிப்பதையும் காண முடிந்தது.
அந்த புதிய கடிதம் தீபாவளி தருணத்தில் வீட்டை விட்டு வெளியேற்றும் ஆணையை திரும்பப் பெற்றுக் கொண்டு, மேலும் இரண்டு மாத கால கூடுதல் அவகாசம் வழங்கியிருந்தது.
அதன்படி நில அலுவலக அறிக்கை பெற்றுக் கொண்ட நாளில் இருந்து 60 நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை பிரித்து எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தது.
அந்த கால கட்டத்தில் வீடுகளை அப்புறப்படுத்த தவறினால் மட்டுமே , நில அலுவலகம் வீடுகளை உடைக்க மேல் நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டு உள்ளது.
சிலாங்கூர் கினி