
குவாந்தான், அக் 12-
பல்லாண்டு காலமாக தமிழ்ப்பள்ளிகளில் கலைமகள் விழா நடத்தப்பட்டுதான் வருகிறது. தமிழ்ப்பள்ளிகளில் தைத்திருநாளும் கலைமகள் விழாவும் தவிர்க்க முடியாத “கொண்டாட்டம்” என்பது நாம் அறிந்ததுதான்.
தமிழ்ப்பள்ளிகள் என்பது மொழி, இனம் தொடர்பான பள்ளி. ஒட்டுமொத்த தமிழர்களை இணைக்கும் இடம் அதுதான். அதில் கலைமகள் விழா கொண்டாடுவது பெரிய தவறில்லை. ஆனால் தமிழ்ப்பள்ளி என்பதால் கலைமகள் விழாவை தமிழ் மரபுவழி கொண்டாட வேண்டும் என்று உரிமைக் கட்சியின் பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு கணேசன் கேட்டுக்கொண்டார்.
மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தமிழ்ப்பள்ளிகளில் நடத்தும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தமிழில் வழிபட ஆசிரியர்கள் முன்வர வேண்டும். தமிழ்ப்பள்ளி என்பதால் வழிபாடுகள் தமிழில்தான் நடத்த வேண்டும்.தொடக்கக் காலங்களில் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மரபுவழி நடத்தி வந்த சமய விழாக்கள் திசைமாறி வடநாட்டார் மரபுவழி சமயமுறையில் நடத்தப்பட்டு வருவது கண்டனத்துக்குரியது.
வடநாட்டார் மரபில் கலைமகள் விழாவை நடத்துகின்றதை தமிழ்ப்பள்ளிகள் கைவிட வேண்டும். கலைமகள் விழா இந்துமத விழாவாக இருந்தாலும் வழிபாட்டு முறை என்பது இனத்திற்கு இனம் மாறுபடும். தமிழர் மரபுவழி வழிபாட்டு முறை என்பது பூவும் நீரும் பூசனை படைத்து கைகூப்பி வணங்கும் மிக எளிமையான முறையாகும். அதேபோல் தமிழ் மந்திரங்களான திருமுறை ஓதி வழிபடுவதே தமிழர் மரபாக விளங்குகிறது.
நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழில்தான் இறைவழிபாட்டை மேற்கொண்டனர் என்பதற்கு சான்றுகள் ஏராளம்.
தமிழ்நாட்டு அருளாளர்களும் சித்தர்களும் அருளிய தமிழ்த்திருப்போற்றிகளையும் வாழையடி வாழையாக பின்பற்றிவரும் வழிபாட்டு முறையையும் புறந்தள்ளி வடநாட்டார் மரபுவழி வழிபாட்டு முறையை தமிழ்ப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவது தமிழினத்திற்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகச் செயலாகும்.
ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் எப்படி வேண்டுமானும் வழிபடுங்கள். பள்ளியில் நடத்தும்போது நோக்கமறிந்து இடமறிந்து சரியாகச் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
அதே வேளையில் திராவிடக் கொள்கையாளர்கள் தமிழ் தமிழர் தமிழ் வழிபாடு தொடர்பான பற்றியங்களில் தலையிடுவதை தவிர்த்து திராவிட மொழிக்கும் திராவிட இனத்திற்கும் சீர்த்திருத்த செயல்பாடுகளிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். மேலும் சமய வழிபாட்டு உரிமையை பற்றி கேள்வி எழுப்புவதற்கு இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கே உரிமை உண்டு என்பதை திராவிட கொள்கையாளர்கள் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை கணேசன் நினைவுறுத்தினார்.

