காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர், அக்.13-
மக்களுக்கான சேவையை மைபிபிபி கட்சி தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களுக்கு இலவச குடிநீரும் உணவுகளையும் வழங்க கட்சி முன்வந்துள்ளதாக அதன் தேசியத் தலைவர் டத்தோ லோகபாலன் தெரிவித்தார்.
இம்மாதம் 16ஆம் தேதி முதல் மைபிபிபி தலைமையகத்தின் முன் இலவச குடிநீர் சேவை வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு சனிக்கிழமையில் முதல் கட்டமாக 50 உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மைபிபிபி தலைமையக கட்டம் அமைந்துள்ள பகுதிக்கு சுற்றுப்பயணிகளும் இளைஞர்களும் அதிகமாக கவரும் இடமாக உள்ளது. இங்கு வருபவர்களுக்கு சேவையை வழங்க இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற மைபிபிபி கட்சியின் உச்சமன்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இந்த தகவளை கூறினார்.
மேலும் தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கு உதவும் வகையில் அரசு வெ.1.5 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இந்த தொகை இந்திய சமுதாயத்திற்கு போதாது. அத்தொகை வெ.50 மில்லியனாக உயர்த்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கையை முன்வைத்தார்.
அதுமட்டுமின்றி அனைத்து இன மாணவர்களுக்கு முறையான கல்வி வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டதாக அவர் சொன்னார்.