கோலாலம்பூர், அக். 20-
பாலஸ்தீனர்களின் சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்திய ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் படுகொலை செய்த இஸ்ரேலின் செயலுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவரின் படுகொலையை மலேசியா எதிர்ப்பதோடு பாலஸ்தீனத்தின் விடுதலை முயற்சிகளை பலவீனப்படுத்த இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கை இது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது என அவர் குறிப்பிட்டார்.
அமைதியையும் நீதியையும் நிலைநிறுத்துவதில் அனைத்துலகச் சமூகம் மறுபடியும் தோல்வி கண்டு விட்டது என்பதை இச்சம்பவம் நிரூபித்துள்ளதோடு பாலஸ்தீன- இஸ்ரேல் நெருக்கடியை இது மேலும் மோசமாக்கியுள்ளது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு எதிராக அனைத்துலக சமூக ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். அதே சமயம், பாலஸ்தீனர்களுக்கு எதிராக படுகொலைகளை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்டத் தாக்குதலில் யாஹ்யா சின்வர் படுகொலை செய்யப்பட்டதை ஹமாஸ் நேற்று உறுதிப்படுத்தியது.
கடந்த ஆகஸ்டு மாதம் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவுக்கு பதிலாக யாஹ்யா சின்வர் நியமிக்கப்பட்டார்.
பெர்னாமா