கோலாலம்பூர், அக் 25 – இவ்வாண்டு பிப்ரவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே மூதாட்டி மற்றும் வெளிநாட்டவர் உட்பட நான்கு பெண்களிடம் கொள்ளையிட்டதாக ஆடவர் ஒருவருக்கு எதிராக இங்குள்ள மூன்று செஷன்ஸ் நீதிமன்றங்களில் இன்று நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வேலையில்லாத நபரான எம். தனபாலன் (வயது 38) மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் ஜாலான் லிமாவ், பங்சார் பிரிக்ஃபீல்ட்சில் 78 வயது மூதாட்டி ஒருவரின் கைப்பையை பறித்ததோடு அவர் காயமடையவும் காரணமாக இருந்ததாக நீதிபதி எகுஸ்ரா அலி முன்னிலையில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையில், நீதிபதி சித்தி ஷஹிரா மொக்தாருடின் முன்னிலையில் விசாரணைக்கு வந்த மற்றொரு வழக்கில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி காலை 7.40 மணிக்கு பிரிக்ஃபீல்ட்ஸ், பேங்க் ராக்யாட் இரட்டைக் கோபுரங்களுக்கு அருகில் நூர்பரா ஹஸ்வானி அகமது ஜைடி (வயது 29) என்பவருக்குச் சொந்தமான 3,500 வெள்ளியை திருடியதாகவும் அந்த நபர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 394 இன் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி காலை 6.15 மணிக்கு பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துன் சம்பந்தனில் ரெபேக்கா மெத்தியூஸ் (வயது 20) என்ற பெண்ணிடம் 3,000 வெள்ளி மதிப்புள்ள கையடக்க கணினி, ரொக்கம் உள்ளிட்டப் பொருள்களை கொள்ளையிட்டதாக நீதிபதி நோரினா ஜைனால் அபிடின் முன்னிலையில் அவர் மேலும் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
அதே நீதிமன்றத்தில், கடந்த மார்ச் 18 ஆம் தேதி காலை 6.50 மணியளவில் பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு அருகே கொரியப் பெண்ணான லீ ஹியோன்ஜூ என்பவரிடப் 885 வெள்ளியை திருடியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் வழங்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் 392வது பிரிவின் கீழ் இவ்விரு குற்றச்சாட்டுகளும் கொண்டு வரப்பட்டன,
குற்றம் சாட்டப்பட்ட தனபாலனுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை