
சியோல்: உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவுவதற்காக வடகொரியா கடந்த வாரம் 1,500 வீரர்களை அனுப்பியிருப்பதாக தென் கொரியா குற்றம்சாட்டியது. மேலும் 10,000 வடகொரியா வீரர்கள் ரஷ்யா செல்ல தயார் நிலையில் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். ஆனால் இந்த தகவல்களை அமெரிக்காவும், நேட்டோ படையும் உறுதிபடுத்தவில்லை. அதே சமயம், இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரித்திருந்தன.
இந்நிலையில், வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட வீடியோவை தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ரஷ்யாவுக்கு வடகொரியா வீரர்களை அனுப்பியிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை வடகொரியா துருப்புகள், ரஷ்யாவுடன் உக்ரைன் போரில் இணைந்தால் அது மிகத் தீவிரமான பிரச்னையாகிவிடும். ஐரோப்பா மற்றும் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.