கோலாலம்பூர், அக்.31-
தீபத்திருநாளைக் கொண்டாடும் மலேசியவாழ் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்.
இந்த ஒளிவிளக்குப் பண்டிகை, மலேசிய இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு, குறிப்பாக இந்திய சமுதாயத்தின் கல்வி மறுமலர்ச்சி, பொருளாதார மேம்பாடு, வளப்பமான சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு கட்டியம் கூறுவதாக அமைய வேண்டும்.
தீபாவளிப் பண்டிகையை நாம் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் கொண்டாட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை; நம்மிடையே ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துவதற்கு இந்தத் தீபத் திருநாள் மிகமிக அவசியம்; தவிர, நமது சமய பாரம்பரியத்தை வழிவழி கட்டிக்காப்பதற்கும் இத்தகைய பண்டிகைகள் துணைபுரியும்.
அதேவேளை, ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்ற இந்தத் திருநாள் தொடர்பில் நம் ஆற்றலையும் நிதி சேமிப்பையும் அதிகமாக விரயமாக்கி விடாமல், நாட்டின் பொருளாதார நிலையைக் கருதி சிக்கனமாக, அதேவேளை சீராகக் கொண்டுடாடுவதுபற்றி இந்துக்கள் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தங்களின் எதிர்காலத்தையும் உயர்க்கல்வி பயணத்தையும் தீர்மானிக்கும் எஸ்பிஎம் தேர்வில் அமர இருக்கும் நம் சமுதாய மாணவர்கள், தீபத் திருநாள் மகிழ்ச்சியில் திளைக்கும் அதேவேளை, தங்களின் கல்விப் பயணத்தில் விழிப்பாகவும் இருக்க வேண்டும்.
உயர்க்கல்வி ஒன்றுதான், நம் சமுதாயத்தைக் காக்கவல்ல ஒரே ஆயுதம் என்பதால்தான், ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான வெள்ளியை நம் சமுதாய மாணவர்களின் நலம்கருதி மஇகாவின் கல்விக்கரமான எம்.ஐ.இ.டி. மூலம் கல்வி உதவிநிதியாகவும் கடனாகவும் வழங்கிவருகிறோம்.
தவிர, நம் மக்களுக்கு நாட்டின் நிகழ்கால அரசியல் போக்கை அவதானிக்கும் ஆற்றலும் பொருளாதாரம் குறித்த விழிப்புணர்வும் அவசியம் தேவை.
இந்து மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்திய சமுதாயமும் வளமும் நலமும் மிக்க எதிர்காலத்தைப் பெற்றிட இந்தத் தீபாவளிப் பண்டிகை துணைபுரிய வேண்டும் என்று மஇகாவின் உள்ளார்ந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் அதேவேளை, இவை அனைத்திற்கும் துணைநின்று அருள்வழங்கும்படி எல்லாம்வல்ல இறைவனை இத்தீபத் திருநாளில் வேண்டிக் கொள்வதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.