கோலாலம்பூர்,நவ1– ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான மோதலில் மலேசிய பிரஜை ஒருவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரச மலேசிய போலீஸ் படை ரஷ்ய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது என்று தேசிய போலீஸ படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக புக்கிட் அமான் சிறப்புப் பிரிவு ரஷ்ய தூதரகத்தை அணுகியுள்ளதாக அவர் சொன்னார்.
கூலிப்படை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் தொடர்புடைய உள்ளூர் குடிமக்களின் நிலை உட்பட, உறுதிப்படுத்துதல் நோக்கத்திற்காக தூதரகத்திடம் கூடுதல் தகவலைப் பெற நாங்கள் தற்போது காத்திருக்கிறோம் என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார் .
வெளிநாட்டில் படிப்பதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினருடனும் போலீசார் தொடர்பு கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து ஊகங்களை வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.
எந்தவொரு வெளிநாட்டு போராளித் தரப்பினர் அல்லது பிற நாடுகளுடன் தொடர்புடைய மோதல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது என்று அவர் கூறினார்.
உக்ரேனில் போர்க்களத்தில் கண்டெடுக்கப்பட்ட மைகாட் மற்றும் மலேசிய ஓட்டுநர் உரிமத்தை சித்தரிக்கும் பல புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது.
ரஷ்யப் படைகள் உக்ரேனின் லெவாட்னே பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்த பின்னர் இந்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பெர்னாமா