செ.வே.முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் நவ 1-
இனமத வேறுபாடு இன்றி மலேசியாவை ஒளியை நோக்கி பயணிப்பதற்கு அனைத்து சமூகத்திற்கும் முழுமையான வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்தார்.
நேற்று நடைபெற்ற மடானி தீபாவளி விருந்து உபசரிப்பில் உரையாற்றிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மடானி அரசாங்கம் இன மத பேதமில்லாமல் அனைத்து மலேசியர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது என்றார்.
இந்த தீபத்திருநாள் அனைவரின் வாழ்விலும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என தெரிவித்தார்.
ஒளியின் விழா என்று கூறப்படும் தீபாவளி கொண்டாட்டத்தின் உண்மையான அர்த்தத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக உரையாற்றிய இலக்கியவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பல்வேறு அம்சங்களில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முன்முயற்சிகள், ஒதுக்கீடுகள் இந்திய சமூகம் உட்பட மக்களுக்கு பலனளித்துள்ளன என்று அறிவித்தார்.
சமீபத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த பட்ஜெட் 2025ல், மனித மூலதனத்தைப் பாதுகாக்கவும், சமூக, நலன் சார்ந்த அம்சங்களை மேம்படுத்தவும், இந்திய சமூகத்திற்கான வணிக நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு RM130 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்ததன் மூலம் இது தெளிவாகிறது என்றார்.
இந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில், விலாயா அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தபா, அமைச்சர்கள் டத்தோஸ்ரீ தெங்கு சப்ரூல், டத்தோஸ்ரீ அப்துல் கனி ஜோகாரி, அந்தோனி லோக், டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடீர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.