


செமினி, நவ.2-
தீபாவளியை முன்னிட்டு செமினி யுனைடெட் கால்பந்து அகாடமி கால்பந்து போட்டியை ஏற்பாடு செய்தது..
இந்த அகாடமி கடந்த 2006ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டு 18 ஆண்டு காலமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த கால்பந்து போட்டி நடத்தப்படுவதன் முக்கிய நோக்கம் பள்ளி மாணவர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபட ஊக்குவிப்பதற்கு ஆகும்.
இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் மாவட்ட, மாநில ரீதியிலான போட்டிகளில் குறிப்பாக பரதன் கிண்ணக் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர் என்று இந்த அகாடமியின் தலைவரும் தலைமை பயிற்றுநருமான ஜோன் தெரிவித்தார்.
இந்த விளையாட்டுப் போட்டி வயதுக்கு ஏற்றாற் போல் 10 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் கிண்ணம், சான்றிதழ், காலுறை ஆகியவை வழங்கப்பட்டன.
அதே நேரத்தில் இந்த அகாடமி தோற்றுவிப்புக்கு அதன் ஆலோசகரும் எம்எஸ்டி குளோபல் இன்ஜினியரிங் சென். பெர். உரிமையாளருமான எம்.தினகரன் மிகவும் பக்கபலமாக இருந்தார்.
குறிப்பாக ஜெர்சி, பந்து உட்பட விளையாட்டு உபகரணங்களை வாங்கிக் கொடுப்பது மட்டுமின்றி மேலும் பல உதவிகளையும் செய்துள்ளார்.
இந்த வேளையில், அவருக்கு அகாடமியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
டூசுன் தூவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜொஹான் அப்துல் அஜிஸ், உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரியும் பிகேஆர் உலு லங்காட் தொகுதித் தலைவருமான ராஜன் முனுசாமி ஆகியோர் இணைந்து அதிகாரப்பூர்வமாக போட்டியைத் தொடக்கி வைத்தனர்.
காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களான சந்திரன் ராமசாமி, ராமசந்திரன் அர்ச்சுனன், டயானாஸ் கேட்ரஸ் உரிமையாளர் பி.எம்.சாமி, செமினியைச் சேர்ந்த தொழிலதிபர் ரவி மற்றும் செமினி இந்திய சமூகத் தலைவர் நடேசன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.