ஷாங்காய், நவ. 4 – சீனப் பிரதமர் லீ கியாங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தொடங்கி வரும் நவம்பர் 7 வரை சீனாவுக்குப் பணி நிமித்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
ஷாங்காயில் நடைபெறும் 7ஆவது சீன அனைத்துலக இறக்குமதி கண்காட்சியில் (7ஆவது சி.ஐ.ஐ.இ.) அவர் கலந்து கொள்கிறார்.
இந்த 7ஆவது சி.ஐ.ஐ.இ. கண்காட்சியில் மலேசியா கவுரவ தேசமாக அழைக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் பயணக்குழுவில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருல் அப்துல் அஜிஸ் மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த ஜூன் 19ஆம் தேதி புத்ராஜெயாவில் நடைபெற்ற சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்க பிரதமர் லி கியாங்கைச் சந்திக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக ஷாங்காய் நகரில் விஸ்மா புத்ரா கூறியது.
பரஸ்பர நலன் சார்ந்த மற்றும் தொடர்புடைய பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று விஸ்மா புத்ரா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்னாமா