ஷா ஆலம், நவ. 5 – இந்திய சமூகத்தை கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகவியல் ரீதியாக உயர்த்துவதற்கு சிலாங்கூர் மாநில அரசு பல பிரத்தியேகத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
அவற்றில் சிறு வணிகர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட திட்டங்களில் ஒன்று ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா ஆகும்.
குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பைச் சேர்ந்த இந்திய சிறு வணிகர்களுக்கு வர்த்தக உபகரணங்களை இலவசமாக வழங்கி வர்த்தக விரிவாக்கத்திற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம் முன்னாள் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் அவர்களின் பெரும் முயற்சியால் கடந்த 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
மாநில அரசின் பத்து லட்சம் வெள்ளி வருடாந்திர நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக அமல்படுத்தப்படும் இந்த ஐ-சீட் திட்டத்தின் மூலம் எண்ணற்ற சிறு வணிகர்கள் பயன் பெற்றுள்ளனர்.
இந்தியர்கள் உள்பட அனைத்து இனங்களையும் சேர்ந்த சிறு வணிகர்களுக்கு வர்த்தக உபகரணங்களை இலவசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்ட புளுபிரிண்ட் எனப்படும் வறுமை ஒழிப்பு பெருந்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ள போதிலும், அதே நோக்கத்தைக் கொண்ட மற்றொரு திட்டத்தை இந்தியர்களுக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கியுள்ளது.
இது இந்தியர்களின் பொருளாதார மேம்பாடு மீது மாநில அரசு கொண்டுள்ள அக்கறையை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்த ஐ-சீட் அமைப்பின் நோக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவரிக்கிறார் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி.
வியாபாரத்தில் நேரடியாக ஈடுபட்டு வருவோருக்கு சாதனங்கள் மற்றும் உபகரணங்களை இலவசமாக வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த ஐ-சீட் திட்டம் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தலைமையில் செயல்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் வாக்காளர்களாகப் பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும்.
அவர்கள் முழு நேர வியாபாரிகளாகவும் சிலாங்கூரில் ஒரு ஆண்டுக்கும் மேலாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர்களாகவும் இருப்பது அவசியம் என்று மாதவன் கூறினார்.
மேலும், விண்ணப்பதாரர்களின் குடும்ப வருமானம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதோடு மாநில அரசின் இதர உதவித் திட்டங்கள் வாயிலாக அவர்கள் உபகரணங்களைப் பெற்றிருக்கக் கூடாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான வர்த்தக உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் வழி பயன் பெற விரும்புவோர் தங்கள் தொகுதியிலுள்ள இந்திய சமூகத் தலைவர்களிடம் அல்லது ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு அலுவலகத்தில் அதற்கான விண்ணப்ப பாரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.