கோலாலம்பூர், நவ 5- கஸானா நேஷனல் பெர்ஹாட் மற்றும் பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் (பி.என்.பி.) ஆகியவற்றுக்கு ஏற்பட்ட முதலீட்டு இழப்புகளை விசாரிப்பதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) உள்நாட்டு இணைய ஆடம்பர ஆடை விற்பனை நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் மூன்று வர்த்தக வளாகங்களில் நேற்று சோதனையை நடத்தியது.
அந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட 4 கோடியே 39 லட்சம் வெள்ளி பொது நிதி முதலீட்டு இழப்பு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது என்று அந்த ஆணையம் தனது அதிகாரப்பூர்வ டிக் டாக் இடுகையில் தெரிவித்துள்ளது.
அந்த வணிக அலுவலகத்தில் எம்.ஏ.சி.சி. அதிகாரிகள் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளை நடத்துவதைக் காட்டும் 58 வினாடி காணொளி ஒன்றையும் அது பதிவேற்றம் செய்துள்ளது.
எம்.ஏ.சி.சி. சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த ஆணையம் கூறியது.
எனினும், ஏக காலத்தில் சோதனைக்குட்படுத்தப்பட்ட மற்ற வளாகங்களின் இருப்பிடத்தை அது வெளிப்படுத்தவில்லை.
கஸானா நேஷனல் பெர்ஹாட் மற்றும் பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் (பி.என்.பி.) ஆகியவற்றுக்கு ஏற்பட்ட முதலீட்டு இழப்புகள் தொடர்பில் ஆடம்பர ஆடை வடிவமைப்பு நிறுவனத்திற்கு எதிரான விசாரணை நியாயமான மற்றும் தொழில் நிபுணத்துவ முறையில் நடத்தப்படும் என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி கடந்த சனிக்கிழமை உறுதியளித்தார்.