காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் நவ 5-
உலகமே எதிர் பார்த்து கொண்டிருக்கும் அமெரிக்கா அதிபர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நாளை இரவுக்குள் வெற்றியாளர் யார் என்பது ஒரளவு தெரிந்து விடும்.
இந்திய வம்சாவளி யான கமலா ஹரிஸ் மற்றும் டோனால்ட் டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு உலக அளவில் தங்கத்தின் விலை சீராக இருக்க வேண்டும் என்பதை உலகளாவிய தங்க வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர், நகை வணிகர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கூறினார்.
தங்கத்தின் விலை உலகளாவிய நிலையில் தினந்தோறும் பலமடங்கு உயர்ந்து வருகிறது.
இதற்கு மத்திய கிழக்கில் நடக்கும் போர்கள் முக்கிய காரணமாக உள்ளது.
அதே வேளையில் நிலைத் தன்மை இல்லாத அரசியல் சூழ்நிலை, அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகியவையும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று அவர் சொன்னார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலும் இதற்கு ஒரு அளவுகோலாக பார்க்கப்படுகிறது என்பதால்
இதில் யார் வெற்றி பெற்றாலும் உலகளவில் நடக்கும் யுத்தப் பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதன் மூலம் தங்கத்தின் விலை சீராகும். இதைதான் உலக அளவில் உள்ள தங்க வணிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் சுட்டிக் காட்டினார்.
தங்கத்தின் விலை அதிகரித்தால் வணிகர்களுக்கு நல்லது என்று கூறுவதில் உண்மை இல்லை.
தங்கத்தின் விலை உயர்ந்தால் வாங்கும் சக்தி குறைந்து விடும். வாங்கும் சக்தி இல்லை என்றால் வணிகம் எப்படி நடக்கும்? என்று அவர் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.