வெப்பமண்டல கிறிஸ்டின் புயலால் பாதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மலேசியாவின் உறுதியான ஆதரவைப் புலப்படுத்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அந்நாட்டு மக்களின் துன்பத்தைத் தணிக்க மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாகக் கூறினார்.
பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெயின் மக்களுக்கும் அவர் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டார்.
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பேரழிவு குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட பிரதமர், ஒற்றுமை மற்றும் நெருக்கமான பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இந்த பயங்கரச் சோகச் சம்பவம் அனைத்து தரப்பினருக்கும் நினைவூட்டுகிறது என்றார்.
அதிபர் பாங்போங்கிற்கும் (பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் ரோமுவால்டெஸ் மார்கோஸ் ஜூனியர்) மற்றும் பிலிப்பைன்ஸ் மக்களுக்கும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியா பிலிப்பைன்ஸுடன் உறுதியாக நிற்கிறது. குறிப்பாக துன்பம் மற்றும் துயர காலங்களில்.
தனது அண்டை நாடுகளை அது ஒருபோதும் புறக்கணிக்காது.
நாங்கள் உடனடி உதவியைத் திரட்டி வரும் அதே வேளையில், நீண்ட கால மீட்பு மற்றும் மறுகட்டமைப்புக்கான முன்முயற்சிகளுக்கு பங்களிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்துள்ளோம் என அவர் சொன்னார்.
தனது நெருங்கிய நண்பரான மார்கோஸிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றதாகவும் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள குடியரசிற்கு மலேசியாவின் முழு ஆதரவை அச்சந்திப்பின்போது தாம் புலப்படுத்தியாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஸ்பெயினில் ஏற்பட்ட பேரழிவு குறித்த ஒரு தனி பதிவில் அன்வார் கூறியதாவது: கடந்த வாரம் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் வலென்சியாவில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி பரவலான பேரழிவுகளை சந்தித்த ஸ்பெயின் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த கடினமான காலங்களில் ஸ்பெயின் மலேசிய மக்கள் மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். மேலும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வார்கள் என அன்வார் குறிப்பிட்டுள்ளார்.