குடிநுழைவுத் துறை நேற்று பிற்பகல் கிள்ளான் நகரிலுள்ள கிளாங் சென்ட்ரல் கடைத் தொகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது மனித கடத்தலால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் ஆறு வங்காளதேச ஆடவர்கள் மீட்கப்பட்டனர்.
புத்ராஜெயாவில் உள்ள குடிநுழைவுத் துறை தலைமையகத்தின் புலனாய்வு மற்றும் சிறப்பு அமலாக்கக் குழு நேற்று மாலை 3.54 மணியளவில் மேற்கொண்ட இச்சோதனையில் சம்பந்தப்பட்ட வளாகப் பராமரிப்பாளர் என சந்தேகிக்கப்படும் 30 வயது வங்காளதேச ஆடவர் கைது செய்யப்பட்டார்.
இச்சோதனையின் போது சந்தேக நபர் ஒரு அறையின் ஜன்னல் வழியாக தப்பி ஓட முயன்றதாவும் சிறிது நேரப் போராட்டத்திற்கு பிறகு அவ்வாடவர் மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் அத்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அந்த சந்தேக நபர் 2097ஆம் ஆண்டு கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 12இன் கீழ் ஷா ஆலம் போலீஸ் தலைமையக லாக்கப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கை கூறியது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகளாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொருவரிடமும் தலா 15,000 வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கடப்பிதழ், விசா மற்றும் விமான ஏற்பாடுகளை அந்த கும்பலே நிர்வகித்து வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் அக்கடையில் தங்க வைக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வெளியேற விரும்புவோர் கூடுதலாக தலா 5,000 வெள்ளி செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியது.
கைது செய்யப்பட்ட ஆடவரிடமிருந்து ஏழு வங்களாதேச கடவுச்சீட்டுகள் மற்றும் ஏழு கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன. 18 முதல் 41 வயதுக்குட்பட்ட பாதிக்கப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காக தஞ்சோங் கிளிங்கில் உள்ள புகலிட மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.