இங்குள்ள பத்து 9 டோல் சாவடியில் பணியில்
இருந்த ஊழியரைத் தகாத வார்த்தையில் திட்டி, டோல் சாவடி சுவரையும்
எட்டி உதைத்த காரோட்டி ஒருவர் உலு லங்காட்டிலுள்ள வீடமைப்புப்
பகுதியில் நேற்று மாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
காரோட்டி ஒருவருக்கும் டோல் சாவடி பணியாளருக்கும் இடையே
நிகழ்ந்த வாக்குவாதத்தைச் சித்தரிக்கும் காட்சிகளடங்கிய பேஸ்புக் பதிவு
ஒன்று நேற்று காலை 11.13 மணியளவில் தங்கள் கவனத்திற்கு வந்ததாக
காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோம் அப்துல் யூசுப்
கூறினார்.
காரிலிருந்து இறங்கிய ஆடவர் ஒருவர் டோல் சாவடியை நெருங்கி அதன்
பணியாளரைத திட்டியதோடு அதன் சுவரையும் எட்டி உதைக்கும் காட்சி
அந்த காணொளியில் பதிவாகியிருந்ததாக அவர் சொன்னார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணையைத் தொடக்கிய காஜாங் மாவட்ட
போலீசார் அந்த டோல் சாவடியின் பணியாளரான 22 வயது பெண்ணிடம்
வாக்குமூலம் பதிவு செய்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.
டச் அண்ட் கோ சேவையைப் பயன்படுத்தி டோல் கட்டணம் செலுத்தும்
போது அந்த சாதனத்தை பலமாக தட்டியதை தாம் கண்டித்த
காரணத்தினால் சினமடைந்த அந்த காரோட்டி தம்மைக் கடுமையான
வார்த்தைகளால் திட்டியதோடு டோல் சாவடியின் சுவரையும் எட்டி
உதைத்ததாக அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார் என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் உலு
லங்காடிடில் உள்ள வீடமைப்பு பகுதி ஒன்றில் 31 வயதுடைய அந்த
ஆடவரைக் கைது செய்ததோடு கருப்பு நிற பெரேடுவா அல்சா ரகக்
காரையும் பறிமுதல் செய்தனர் என்று அவர் சொன்னார்.
அவ்வாடவரிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் சோதனையில் அவர் ஷாபு
வகை போதைப் பொருளை உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
மேலும் அவர் மீது போதைப் பொருள் உள்ளிட்ட 17 முந்தையக்
குற்றப்பதிவுகள் உள்ளதும் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.
மெக்கானிக்காக பணி புரியும் அந்த ஆடவருக்கு எதிராக தண்டனைச்
சட்டத்தின் 427வது பிரிவு, 1955ஆம் ஆண்டு சிறுகுற்றச் சட்டத்தின் 14வது
பிரிவு மற்றும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின்
15(1)வது பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்றார் அவர்.