
கோலாலம்பூர், நவ. 7-
முன்னாள் சூலு சுல்தானின் வாரிசுகள் எனக் கூறிக்
கொள்ளும் தரப்பினர் தொடுத்த சபா உரிமை கோரல் வழக்கை பிரான்ஸ்
உச்ச நீதிமன்றம் நேற்று முழுமையாக தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பு மலேசியாவுக்கு ஒரு வராற்றுப்பூர்வ வெற்றியாகும் என்று
பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் அமைப்புச் சீர்திருத்தம்)
டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் கூறினார்.
சூலு சுல்தான் வாரிசுகளுக்கு 1,500 அமெரிக்க டாலரை மலேசியா வழங்க
வேண்டும் என்ற போலி இறுதி தீர்ப்புக்கான தொடக்க அடிப்படை பிரான்ஸ்
சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை இந்த தீர்ப்பு
உணர்த்துகிறது என்றார்.
டாக்டர் கோன்ஸாலோ ஸ்டெம்பா வழங்கிய இறுதித் தீர்ப்பு எனப்படும்
உத்தரவை ரத்து செய்வதற்கு ஏதுவாக பாரிஸ் மேல் முறையீட்டு
நீதிமன்றம் விரைவில் கூடும்.
இந்த வழக்கின் முடிவு நிச்சயமாக
மலேசியர்களுக்கு சாதகமாக அமையும் என்று அவர் தனது பேஸ்புக்
பதிவில் தெரிவித்தார்.
பிரான்ஸ் நீதிமன்றத்தின் இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு சட்ட
பரிபாலன முறைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என வர்ணித்த டத்தோஸ்ரீ
அசாலினா, சர்ச்சைகளுக்கு தீர்வு காண்பதற்கு உதவும் மாற்று வடிவமாக
விளங்கும் அனைத்துலக நடுவர் அமைப்பின் புனிதத்தை இது பாதுகாக்கும்
என்றார்.
மலேசியாவின் நிலையைத் தொடர்ந்து தக்க வைத்து கொள்வதற்கு
மேற்கொள்ளப்பட்ட இடைவிடாத முயற்சிகளுக்கு முழு ஆதரவை
வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தாம் நன்றி
தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் சூலு சுல்தானின் வாரிசுகள் எனக் கூறிக் கொண்ட எட்டு
பிலிப்பைன்ஸ் பிரஜைகள் சபா உரிமை கோரல் தொடர்பில்
கோடிக்கணக்கான டாலர் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்தனர்.
சூலு சுல்தான் வாரிசுகளின் இந்த வழக்கை விசாரிக்க மாட்ரிட் நீதிமன்றம்
கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்டெம்பாவை மத்தியஸ்தராக நியமித்தது.
மனுதாரர்களுக்கு ஆதரவாக கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்
ஸ்டெம்பா தீர்ப்பளித்தார். இந்த போலியான தீர்ப்பின் காரணமாக
மலேசியா 1,490 கோடி டாலரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
பெர்னாமா