கெய்ரோ, நவ.11 – ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) தீர்மானங்களை ஏற்க மறுக்கும் எந்த நாடும் அந்த உலக அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்மொழிந்துள்ளார்.
எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரமானமான தாக்குதலைச் சுட்டிகாட்டிய அவர், வெளியேற்றம் மட்டுமே அத்தகைய நாடுகளுக்கு எதிரான ஒரே வழி என்று கூறினார்.
காஸாவில் இனப்படுகொலை நடக்கும் அதே வேளையில் மனிதாபிமான உதவிக்கு கூட இஸ்ரேல் ஒப்புக்கொள்ள மறுப்பதால் ஒரு சிக்கலான சூழ்நிலையை நாங்கள் எதிர்கொள்கிறோம் என்றார். அதனைக் கடுமையாக எதிர்ப்பதற்காக மிகவும் வலுவான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்.
உண்மையில், ஐ.நா மற்றும் பாதுகாப்பு மன்ற விதிகள் மற்றும் தீர்மானங்களை ஒரு நாடு ஏற்க மறுத்தால் அந்நாட்டை வெளியேற்றுவதுதான் ஒரே வழி என்ற கருத்தை நான் முன்வைத்துள்ளேன்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்-இத்திஹாதியா அரண்மனையில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பைத் தொடர்ந்து அதிபர் அல்-ஸிசியுடன் நடத்திய கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
எகிப்துக்கு நான்கு நாள் பணி நிமித்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அன்வார் அதிபர் எஃஅல்-ஸிசியூடன் மரியாதை நிமித்தச் சந்திப்பை நடத்தினார்.
காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கான மலேசியாவின் மனிதாபிமான உதவிகளை எளிதாக்குவதில் ஆதரவு அளித்த எகிப்துக்கு மலேசிய மக்களின் சார்பாக நன்றியையும் அவர் தெரிவித்தார்.
பெர்னாமா