பிறை, நவ 12-
செபராங் ஜெயா – கம்போங் மானிஸின் குடியிருப்பாளர்களுக்கான குடியிருப்பு வீடுகளை நிர்மாணிப்பது உட்பட ‘ரிவானிஸ்’ எனப்படும் கலப்பு மேம்பாட்டுத் திட்டம் பினாங்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு மாநில அரசின் பினாங்கு2030 இலக்கின் முன்முயற்சிகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது.
இரயில்வே சொத்துடைமை கார்ப்பரேஷன் (RAC) மற்றும் பினாங்கு மாநில வீட்டு வசதி ஆணையம் (LPNPP) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoA) கையெழுத்தானது; மேலும், RAC மற்றும் ரிவானிஸ் வென்ச்சர்ஸ் தனியார் நிறுவனம் இடையேயும் முதன்மை ஒப்பந்தமும் (HoA) நேற்று கையெழுத்தானது.
இது பண்டார் பிறையில் உள்ள லோட் 286, 65 மற்றும் 67 வது பகுதியின் மேம்பாட்டுத் திட்டத்தை உள்ளடக்கியுள்ளது.
“உண்மையில், கம்போங் மானிஸின் மேமபாட்டுத் திட்டமிடல் நீண்ட காலமாக மாநில அரசின் கவனத்தில் உள்ளது.
கம்போங் மானிஸ் நிலம் மத்திய அரசின் கீழ் உள்ள RAC-க்கு சொந்தமானதாகும்.
“இன்று, பினாங்கு மாநில அரசும் மத்திய அரசும் ‘ஒரு குடும்பமாக’ இணைந்து செயல்படுவதால், பினாங்கு மாநிலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் கூட்டரசு திட்டங்களை மாநில அரசு வரவேற்கிறோம்.
“இந்தத் திட்டத்தை விரைவுபடுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். இது போன்ற கலப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் எங்கள் வாக்காளர்களின் தலைவிதியை மாற்ற அரசாங்கம் உதவ முடியும்,” என்று ‘தி லைட்’ தங்கும்விடுதியில் நடைபெற்ற ஒப்பந்தம் கையெழுத்திடம் நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் விவரித்தா
மேலும் முதல்வர் சாவ் கொன் இயோவ் பேசுகையில் வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூல் ஆட்சிக்குழு உறுப்பினரான டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ மத்திய அமைச்சுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு இத்திட்டத்தை மெய்பித்ததற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சு(MoT) மற்றும் RAC ஆகியவை இந்த முன்மொழியப்பட்ட கலப்பு மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துகின்றன.
இந்த கலப்பு மேம்பாட்டுத் திட்டம் ‘ஆறு’ (நதி) மற்றும் மானிஸ் (கம்போங் மானிஸ்) ஆகிய இரண்டு பகுதிகளின் இணைப்பில் ‘ரிவானிஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல் கட்டம் 850 சதுர அடி பரப்பளவைக் கொண்ட 338 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை உள்ளடக்கும்.
மேலும் இதில் நீச்சல் குளம், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற பொது வசதிகளுடன் அமைக்கப்படும்.
கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு, இந்த மேம்பாட்டில் சொகுசு அடுக்குமாடி வீடமைப்புத் திட்டம், வணிக மையங்கள், டிரைவ்-த்ரூ மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற பல்வேறு மேம்பாட்டுக் கூறுகளும் அடங்கும்.
அவை மிகவும் நவீனம் மற்றும் ஆற்றல்மிக்க நகர்ப்புற நிலப்பரப்பை உருவாக்கப் பங்களிக்கும்.
அதற்கு முன் பேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் பேசுகையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அல்லது அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டத்தை முடிக்க முடியும் என்று தனது அமைச்சு நம்புவதாகக் கூறினார்
கம்போங் மானிஸின் தகுதியான குடியிருப்பாளர்களுக்கு மொத்தம் 177 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள்(RMM) இலவசமாக வழங்கப்படுவதாக அந்தோணி உறுதியளித்தார்.
அவரைப் பொறுத்தவரை, தகுதியான 177 பெறுநர்களுக்கு 850 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு யூனிட் (சுமார் ரிம400,000 மதிப்புடையது) வாகனம் நிறுத்துமிடமும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
“எங்கள் நிபந்தனை (MoT) என்னவென்றால், 30 மாடி அடுக்குமாடி குடியிருப்பு முதலில் கட்டப்பட வேண்டும், அது முடிந்ததும், குடியிருப்பாளர்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள்.
அதன் பிறகுதான் அசல் வீடுகளைக் கலப்பு மற்றும் பிற வணிக நோக்கங்களுக்காக இடிக்க முடியும், என்றார்.
“முழு கலப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான மொத்த வளர்ச்சியின் (GDV) மதிப்பு ரிம1.5 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதையும் அவர் விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாகான் நாடாளுமன்ற உறுப்பினர், லிம் குவான் எங்; மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், பினாங்கு மாநில அரசு செயலாளர், டத்தோ ஹாஜி சுல்கிஃப்லி மற்றும் MoT அமைச்சகத்தின் செயலாளர் டத்தோ ஜனசந்திரன் முனியனும் கலந்து கொண்டார்.