ஷா ஆலம், நவ. 13 -வெளிநாட்டில் நல்ல சம்பளம் தருவதாக உறுதியளிக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து பொதுமக்கள், குறிப்பாக சிலாங்கூர் குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவர்கள் தங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வேலை மோசடி சிண்டிகேட்களில் சிக்கிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
“மக்கள் வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன், குறிப்பாக வெளிநாட்டு வேலை வாய்ய்புகளை பற்றி முழுமையான சரிபார்ப்பைச் செய்ய வேண்டும். மேலும் சந்தேகத்திற்குரிய விஷயங்கள் ஏதேனும் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகவும்.
“கிடைக்கும் அனைத்து விவரங்களையும் மதிப்பாய்வு செய்ய பயன்படுத்தவும். நிறுவனத்தின் பின்னணி மற்றும் பலவற்றை ஆராயாமல் விட்டுவிடாதீர்கள்” என்று அவர் கூறினார்.
நவம்பர் 1 அன்று, புனோம் பென்னில் உள்ள மலேசிய தூதரகம் மூலம், சிஹானூக்வில்லி, கம்போடியாவில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 11 மலேசியர்கள் வெற்றிகரமாக திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது.
வெளிநாட்டில் வேலை தேட விரும்பும் மலேசியர்கள் விழிப்புடன் இருக்கவும், வேலை வாய்ப்பின் செல்லுபடியை முதலில் சரிபார்க்கவும் என அமைச்சகம் நினைவூட்டுகிறது.