ஒட்டோவா: நவ 23-
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பில்லை என்று கனடா அரசு விளக்கம் அளித்து உள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக இருநாடுகளும் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றின.
இந்த சூழலில் கனடாவின் முன்னணி நாளிதழான குளோப் அண்ட் மெயிலில் கடந்த 20ஆம் தேதி ஒரு செய்தி வெளியானது.
பெயர் குறிப்பிடப்படாத கனடா பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அந்த செய்தியில், “ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொலை செய்யும் சதித் திட்டம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு முன்கூட்டியே தெரியும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கனடாவில் நிகழ்த்தப்பட்ட கடுமையான குற்றச் செயல்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பு இருக்கிறது என்று கனடா அரசு ஒருபோதும் கூறவில்லை.
இதுதொடர்பாக ஊடகத்தில் வெளியான செய்தி ஊகமானது, தவறானது. இவ்வாறு கனடா அரசு தெரிவித்துள்ளது..