
ஷா ஆலம், நவ. 25 – அண்மையில் நான்கு நாடுகளுக்கு தாம் மேற்கொண்ட
அதிகாரப்பூர்வப் பயணத்திற்கு தனியார் நிறுவனத்தின் நிதி
பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.
இந்த பயணத்திற்கு உண்டான 16 லட்சம் வெள்ளி செலவுத் தொகையை
அரசாங்கமே ஏற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
நான் தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்தவில்லை. 16 லட்சம் வெள்ளி
செலவிலான இந்த நான்கு நாட்டுப் பயணத்திற்கு அரசாங்கம் மலேசியன்
ஏர்லைன்ஸ் விமானத்தைப் பயன்படுத்தியது. இப்பயணத்திற்கு
அரசாங்கத்தின் பணம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது என்று அவர்
குறிப்பிட்டார்.
அந்த விமானத்தில் காலியாக இருந்த இதர இருக்கைகள் முதலீடு
அல்லது கூட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கில் அந்நாடுகளுக்குப்
பயணம் மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இதற்கான செலவுத் தொகையாக அந்நிறுவனம் 45 லட்சம் வெள்ளியை
வழங்கியது என்று பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் கூறினார்.
அரசாங்கத்தின் சிறப்பு விமானம் பயன்படுத்தப்பட்டிருந்தால் நான்கு
நாடுகளுக்குமான பயணத்திற்கு 25 லட்சம் வெள்ளி செலவு பிடித்திருக்கும்.
எனினும், பயணத்தை பகிர்ந்து கொண்டதால் அரசாங்கத்திற்கு 16 லட்சம்
வெள்ளி மட்டுமே செலவு ஏற்பட்டது என அவர் விளக்கினார்.
தனியார் நிறுவனத்தின் நிதி பயன்படுத்தப்படவில்லை என்பதை மீண்டும்
தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதில் நலன் சார்ந்த முரண்பாடு
ஏற்படவில்லை. பொய்யான தகவல்கள் வலையில் சிக்க வேண்டாம் என
அவர் கேட்டுக் கொண்டார்.
நான்கு நாடுகளுக்கு தாம் மேற்கொண்ட பயணத்திற்கு உண்டானச்
செலவில் 70 முதல் 80 விழுக்காட்டுத் தொகையை அந்த பயணத்தில்
பங்கு கொண்ட தனியார் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டதாகப் பிரதமர்
கடந்த வாரம் மக்களவையில் கூறியிருந்தார்