ஐ-சீட் மூலம் ஒன்பது பேருக்கு வர்த்தக உபகரணங்கள் விநியோகம்!

ஷா ஆலம், நவ. 26 – இந்திய சமூகத்தில் குறைந்த வருமானம் பெறும்
தரப்பைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு உபகரணங்களை வழங்குவதன் மூலம்
அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் உன்னதப் பணியை செவ்வனே
ஆற்றி வருகிறது ஐ-சீட் எனப்படும் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா.

நம் சமூகத்தைச் சேர்ந்த பலர் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் வேட்கையில் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

ஆயினும், ‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்‘ என்ற பழமொழிக்கேற்ப அவர்களின் வளர்ச்சிக்கு
ஒரு தூண்டுகோல் நிச்சயம் தேவைப்படுகிறது.

ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தலைமையில் மாநில அரசு
உருவாக்கியிருக்கும் இந்த ஐ-சீட் அமைப்பு பலரது வாழ்வில்
வெளிச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அமைப்பின் முன்னெடுப்பில்
கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய தொழில் முனைவோர்
அண்மையில் வர்த்தக உபகரண உதவிகள் வழங்கப்பட்டன.

உறைய வைக்கப்பட்ட உணவு விநியோகத்தில் ஈடுபட்டு வரும் என்.
கவிதா (கோத்தா அங்கிரிக் தொகுதி), புகைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ள
எம். ராசலிங்கம் (மேரு தொகுதி), செந்தோசா தொகுதியைச் சேர்ந்த
ஜி.நளினி, கார் பழுதுபார்ப்பு பட்டறையை நடத்தி வரும் எஸ்.அப்ரஜிதன்
(செந்தோசா தொகுதி), உணவு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள எஸ். லட்சுமி
(கோத்தா கெமுனிங் தொகுதி), தையல் கடை நடத்தி வரும் எஸ்.பரிமளா
(செந்தோசா தொகுதி)., மோட்டார் சைக்கிள் கடை நடத்தி வரும்
எஸ்.பாலமுருகன், தையல் தொழில் ஈடுபட்டுள்ள எஸ். சரஸ்வதி
(பண்டார் பாரு கிள்ளான் தொகுதி) சிறுதோட்டக்காரான கே. பரமசிவம்
(சுங்கை காண்டீஸ் தொகுதி) ஆகியோரே ஐ-சீட் மூலம் உதவி பெற்ற அந்த
ஒன்பது பேராவர்.

இவர்களுக்கு தையல் இயந்திரம், விவசாய சாதனங்கள், வாகன பழுதுபார்ப்பு உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள், புகைப் படக்கருவிகள்
உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டதாக ஐ-சீட் தலைமை ஒருங் கிணைப்பாளர் எம். மாதவன் கூறினார்.

வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வசதி குறைந்த இந்திய தொழில் முனைவோருக்கு வர்த்தக உபரணங்களை இலவசமாக வழங்குவதை இந்த ஐ-சீட் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles