
ஜெஞ்ஜாரோம், நவ. 25-
மலேசிய இந்து சங்கத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஒருதமிழ்ப் பத்திரிகை ஆசிரியருக்கு அச்சங்கத்தின் மிக உயரிய விருதான சங்கபூசன் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பத்திரிகைத் துறையில் கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாக பணியாற்றி வரும் மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர். ராஜன், சமுதாயத்திற்கும் இந்து சமயத்திற்கும் ஆற்றிவரும் அளப்பரிய சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த சங்கபூசன் விருது வழங்கி சிறப்பிக்கப்படுவதாக சங்கத்தின் தேசியத் தலைவர் தங்க. கணேசன் தம்முடைய உரையில் குறிப்பிட்டார்.
மலேசிய பத்திரிகை துறையில் தொடர்ந்து 48 ஆண்டுகள் பணியாற்றி வரும் ஒரே ஆளுமை பி.ஆர்.ராஜன்.
இந்த நீண்ட நெடிய காலத்தில் இனம், சமயம், கல்வி உரிமைகளுக்கு இன்றளவும் துணிந்து எழுதி வருபவர் மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர்.ராஜன்.
‘சுடும் உண்மைகள்’ இவரின் அடையாளம். இவரின் கூர்மையான, வலிமைமிகு எழுத்துக்கள் பல சமுதாயப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவி இருக்கிறது. தலைவர்களின் அன்புக்குரியவராக இருப்பவர்.
மலேசிய இந்து சங்கத்திற்கு மிகப் பெரிய ஆதரவாகவும் பக்கப்பலமாகவும் இருப்பவர். மலேசிய இந்து சங்கத்தின் தீவிர பற்றாளர்.
தன்னுடைய இந்த 48 ஆண்டுகள் பயணத்தில் பல பத்திரிகையாளர்களையும் புகைப்பட கலைஞர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர் இவர்.
பல அரசியல்வாதிகளின் உயர்வுக்கு இவரின் எழுத்துக்கள் ஏணிப்படியாக இருந்து வருகிறது.
பத்துமலை தமிழ்ப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பி.ஆர்.ராஜன், தமிழ்ப் பள்ளிகளின் மேன்மைக்கு இன்றளவும் பாடாற்றி கொண்டிருப்பவர்.
இரண்டு முறை மலேசிய பத்திரிகை கழகத்தின் சிறந்த பத்திரிகையாளர் விருதை வென்ற இவர், பல மேடைகளில் சிறப்பு விருதுகளையும் பெற்றவர் ஆவார்.
மலேசிய இந்து சங்கத்தின் நிதி திரட்டும் நிகழ்ச்சி நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.00 மணி தொடங்கி ஜெஞ்ஜாரோம், பண்டார் சௌஜானா புத்ராவில் உள்ள மாஹ்சா பல்கலைக்கழகத்தின் பால்ரூமில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அரங்கம் நிறைந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் 9 பேருக்கு உயரிய விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. சங்கரத்னா விருது சி. கோபாலனுக்கு வழங்கப்பட்ட நிலையில் சங்கபூசன் விருது பி.ஆர். ராஜன், கி. மனோகரன், டாக்டர் சிவஸ்ரீ ஏ.எல்.ஆனந்தகோபி சிவாச்சாரியார், ஸ்ரீசண்முகநாதன் சுவாமிகள் (அம்மா), மா. முனியாண்டி, செ. லட்சுமணன், திருமதி ராதிகா ஏகாம்பரம், திருமதி கு. லட்சுமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தாப்பா சத்குரு ஸ்ரீ ஜெக நாதர் ஆத்மநிலையத்தின் அறங்காவலர் டத்தோ ஜெய் கணபதி, தங்க. கணேசன், மலேசிய இந்து சங்க தேசியத் துணைத் தலைவர் கணேஷ் பாபுராவ், சங்கத்தின் உயர்நிலைத் தலைவர்கள் ஆகியோர் இணைந்து இவர்களுக்கு மாலை, அணிவித்து விருதுப் பட்டயத்தை வழங்கினர். பொன்னாடை
விருதுபெறும் ஒவ்வொரும் மேடைக்கு அழைக்கப்படும் போது அவர்களைப் பற்றிய செய்திக் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. கணேஷ் பாபுராவ் தலைமையில் உயர்நிலைத் தலைவர்கள் அவர்களை மிகக் கெளரவமாக மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி பிகேஆர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியப் பிரகாஷ் நடராஜன், ரவாங் தொழிலதிபர் டத்தோ சுரேஷ், அவர்தம் துணைவியார் ஆகியோருடன் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பி.ஆர். ராஜனுக்கு, டத்தோ ஜெய்கணபதி, கணேஷ் பாபுராவ், தங்க. கணேசன் ஆகியோர் சங்கபூசன் விருது வழங்கி சிறப்பித்தபோது…
சங்கரத்னா, சங்கபூசன் விருது பெற்றவர்களுடன் தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.