
ஷா ஆலம், நவ. 27– கிள்ளான் வட்டாரத்தில் வெள்ள பிரச்சனைக்குத்
தீர்வு காணும் பொருட்டு 13 வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ள
49 கோடியே 13 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக அடிப்படை வசதிகள்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
அவற்றில் சுங்கை காண்டீஸ், சுங்கை ராசாவ், தாமான் மெலாவிஸ்,
லெம்பாங்கான் சுங்கை ராசாவ் ஆகிய பகுதிகளில் ஏழு திட்டங்கள்
தற்போது அமலாக்க நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தவிர சுங்கை கெம்போங், சுங்கை பினாங் மற்றும் ஷபாடு
நெடுஞ்சாலையின் புக்கிட் ராஜா பகுதி ஆகிய இடங்களில் மேலும்
மூன்று வெள்ளத் தணிப்புத் திட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன
என்று அவர் சொன்னார்.
மேலும், சுங்கை அன்னாம் செமெந்தா, காப்பார் 4ஆவது மைல் வடிகால்
முறை, ஜாலான் புக்கிட் கெமுனிங் பத்து 4 மற்றும் பத்து 7 வடிகால்
முறை மற்றும் கம்போங் ஜொஹான் செத்தியா ஆகிய இடங்களில் உள்ள
நான்கு திட்டங்கள் அமலாக்கக் கட்டத்தில் உள்ளன என்று அவர்
குறிப்பிட்டார்.
இந்த 11 திட்டங்களுக்கும் மாநில அரசு 13 கோடியே 38 லட்சம்
வெள்ளியை ஒதுக்கியுள்ள வேளையில் தற்போது அமலாக்க நிலையல்
உள்ள ஸ்ரீ மூடா மற்றும் சுங்கை காப்பார் திட்டங்களுக்கு மத்திய அரசு 35
கோடியே 97 லட்சம் வெள்ளியை வழங்கியுள்ளது என மாநில
சட்டமன்றத்தில் அவர் சொன்னார்.