ஷா ஆலம், டிச 1- கிள்ளானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு
தொடர் மழையும் கடல் பெருக்கும் காரணம் என்று மந்திரி பெசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மேலும் ஒரு கடல் பெருக்கு சம்பவம் நிகழும் சாத்தியம் உள்ளதால்
வெள்ள அபாயம் உள்ள இடங்களில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன்
இருக்கும் அதேவேளையில் பாதுகாப்பான இடங்களுக்கு
வெளியேறுவதற்கு இடப்படும் உத்தரவுகளைப் பின்பற்றியும் நடக்கும்படி
பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
கடல் பெருக்கு மீண்டும் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ள
பாதிப்புள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
என்பதோடு வெள்ளம் தொடர்பான சமீபத்திய நிலவரங்களை அறிந்தும்
வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேரு, சுங்கை பிஞ்சாய் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில்
தங்கியுள்ளவர்களை நேற்று மாலை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம்
அவர் இதனைத் தெரிவித்தார்.
மேரு சட்டமன்ற உறுப்பினர் மரியம்
அப்துல் ரஷிட்டும் அப்போது உடனிருந்தார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் வெள்ள அபாயத்தைக்
குறைப்பதற்கு ஏதுவாக வெள்ள நீர் சேகரிப்பு குளங்களை அமைக்கும்
பணியை விரைவுபடுத்தும்படி வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையை
(ஜே.பி.எஸ்.) அமிருடின் கேட்டுக் கொண்டார்.