
ஷா ஆலம், டிச 1- நாட்டின் ஒன்பது மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமாகி வருகிறது.
இன்று காலை 7.30 நிலவரப்படி 698 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 44,795 குடும்பங்களைச் சேர்ந்த 149,606 தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் 37 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
கிளந்தான், திரங்கானு, கெடா, பெர்லிஸ், பேராக், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய ஒன்பது மாநிலங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறையின் பேரிடர் தகவல் அகப்பக்கம் கூறியது.
வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக கிளந்தான் விளங்குகிறது.
இம்மாநிலத்தின் 10 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 29,640 குடும்பங்களைச் சேர்ந்த 95,783 பேர் 283 தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
திரங்கானு மாநிலத்தின் எட்டு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 11,648 குடும்பங்களைச் சேர்ந்த 42,179 பேர் 313 துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அபரிமித உயர்வைக் கண்டுள்ளது.
அங்குள்ள ஏழு மாவட்டங்களில் 2,440 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 7,954 பேர் 52 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
அதே நேரத்தில் நெகிரி செம்பிலானில் 13 துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டு 540 குடும்பங்களைச் சேர்ந்த 1,925 பேருக்கு புகலிடம் அளிக்கப்பட்டுள்ளது
ஜொகூரில் வெள்ளத்தில் 588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெர்னாமா