ஹைதராபாத்: டிச 3-
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துக்கு வரும் 22ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை சிந்து திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
அவர் ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
திருமணம் ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் நடைபெறும் என்று சிந்து குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருமண வரவேற்பு நிகழ்வு டிசம்பர் 24ஆம் தேதியன்று ஹைதராபாத்தில் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகும் பேட்மிண்டன் போட்டிகளில் சிந்து தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
29 வயதான பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும், தோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றது குறிப்பிடத்தக்கது.