
கோலாலம்பூர், டிச. 7- ஆசியான் 2025 தலைவர் பதவியை வகிக்கும் காலக்கட்டத்தில் மலேசியா, ஆசியான் அமைப்பு மற்றும் இதர பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அந்த தவணை காலத்தின் போது ஆசியான் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் மற்றும் நீடித்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்யும் நடவடிக்கைகளுக்கும் அது முன்னுரிமை அளிக்கும் என்று அவர் சொன்னார்.
உலக வர்த்தக அமைப்பின் (டபள்யு.டி.ஒ.) நிர்வாக இயக்குநர் டாக்டர் ங்கோஷி ஓகோன்சோ இவேலாவை நேற்று இங்கு மரியாதை நிமித்தம் சந்தித்தப் பின்னர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில் நிதியமைச்சருமான அன்வார் இவ்வாறு கூறினார்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸப்ருள் அப்துல் அஜிசும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.
இதனிடையே, வளரும் நாடுகளுடனான நியாயமான மற்றும் சமநிலையான பலவழி வர்த்தக முறையை ஆதரிக்கும் மலேசியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
நடப்பு புவி அரசியலில் குறிப்பாக ஒருதலைப்பட்ச செயல்துறையை களைவதில் டபள்யூ.டி.ஓ. தொடர்ந்து ஒரு பொருத்தமான அமைப்பாக தொடர்ந்து விளங்குவதற்கு இது அவசியம் என அவர் கூறினார்.
வெளிப்படையான கோட்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து பாகுபாட்டை நிராகரிப்பதை நோக்கமாக கொண்ட மலேசியாவின் டபள்யூ.டி.ஒ. பிரதிநிதித்துவம், அந்நிய முதலீட்டாளர்கள் மத்தியில் மலேசியா மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பெர்னாமா