
கெய்ரோ: ஜன 15-
இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம், பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரம் முக்கியமானதாக இருக்கும் என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் 15 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதுவரை இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் 46,584 பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர்.
வரும் 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக தான் பொறுப்பேற்பதற்குள் பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்கா, கத்தார் தலைமையிலான மத்தியஸ்தர்கள் முன்னிலையில் இஸ்ரேல், ஹமாஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக 3 தரப்பிலும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஒப்பந்தத்திற்கு உடன்படுமாறு கத்தார் தரப்பில் ஹமாசுக்கும், அமெரிக்கா தரப்பில் இஸ்ரேலுக்கும் அழுத்தம் தரப்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இது குறித்து ஹமாஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இன்னும் ஒப்பந்தத்தில் பல தடைகள் நீக்கப்பட வேண்டி உள்ளது என்றார்.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் கூறுகையில், ‘‘பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.
இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். இனி எதிர்தரப்பு தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
அடுத்த 24 மணி நேரம் முக்கியமானதாக இருக்கும் என்றும் இதில் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
வரும் 20ஆம் தேதி டிரம்ப் அதிபராக பதவியேற்பதற்கு முன்பாக பிரச்னைக்கு தீர்வு காண்பது இலக்காக நிர்ணயித்து பணிகள் நடப்பதாகவும் அதற்கு முன்பாக ஒப்பந்தம் முடிவாக சாத்தியம் இருப்பதாகவும் மத்தியஸ்த குழுவில் உள்ள அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ராய்ட்டர்